Friday, November 11, 2011

முதல் சந்தேகம்

ஓம் நமச்சிவாய
எந்த நிலையிலும் உள் மனதில் இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு வாழ்வை நடத்துபவர்கள் இம்மை மறுமை இரண்டையும் கடந்து எல்லா மகிழ்ச்சியையும் பெற்று கையிலாயத்தை அடைவார்கள்.
ஓம் நமோ நாராயணா
இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்கள் எல்லா பாவங்களும் நீங்கி வைகுண்டத்தில் இடம் பெறுவார்கள்.

இந்த 2 வரிகளை ஒரு நிமிடம் கவனித்துப் (படித்தாலே) பார்த்தாலே கடவுளின் பிறப்பும், பக்தியின் அழகும் தெளிவாகிவிடும். அதாவது உங்களுக்கு துக்கமோ, கலக்கமோ வாழ்க்கையில் என்ன நடந்தாலும் உள் மனதில் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தால் நிம்மதி கிடைக்குமாம். அதுமட்டுமல்லாமல் எங்கும், எப்போதும் மகிழ்ச்சி, இன்பம் நிரம்பி இருக்கும் இடமென்று கருதப்படும் கயிலாயம் மற்றும் வைகுண்டத்தில் இடம் கிடைக்குமாம்.
இதில் இருந்து என்ன தெரிய வருகிறதென்றால் மனிதன் கவலைகளால் தடுமாறும் ஒரு உயிரினம். அவனது கவலைகளுக்குத் தீர்வாக மனதை தேற்ற ஒரு வழி தேவை. கவலைகள் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியோடு இருந்தால் நலமென்று அவனது மனம் நினைக்கிறது.
அவன் இப்படிப்பட்ட நிலையில், கவலையில் தவிக்கும்போது உனது கவலைகளை ஆண்டவனிடம் சொல்லிவிட்டு நீங்கள் உங்கள் கடமையை ஆற்றுங்கள். அவன் உங்கள் கவலைகளைப் போக்குவான் என்று ஆறுதல் சொல்லப்பட்டு பக்தி பரப்பப்படுவதால் மனிதர்கள் கோவில்களில் கூடிவிடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் கவலைகள் தீராதா என்ற ஏக்கம்தான் காரணம்
கவலையைப் போக்கும் கடவுள் ஒருவர் இருக்கும்போது எனக்கு எப்படி கவலை வந்தது? என்று சிந்திப்பவர்கள் யாருமில்லை. அதன் விளைவாகவே ஆலயங்களில் அலைமோதும் கூட்டம் அழுது புலம்பி கவலைகள் தீராதா என்று முறையிட்டு வருகிறது. கவலை தீர்ந்ததாக எண்ணியவர்கள் நன்றிக்கடனாக வேண்டியதை செய்து வருகிறார்கள். இதில் இருந்து கவலையால் தேம்பும் மனிதனின் ஆறுதலுக்காகவும், தேறுதலுக்காகவும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒன்றுதான் கடவுள் என்பது வெளிப்படையாகவே தெரிய வருகிறது.
ஆனால் நான் இதுபோன்ற விஷயங்களில் நம்பிக்கையற்றவன். கடவுள் என்பது பொய் நம்பிக்கையாக தெரிகிறது என்று கூறி வருகிறேன்.
இங்கு வேண்டிக்கொள்வதும் நாமாக இருக்கிறோம், செயல்படுபவரும் நாமாக இருக்கிறோம். பலனை அனுபவிப்பவர்களும் நாமாக இருக்கிறோம். (உதவுபவர்கள் மற்றொரு மனிதராகவே இருக்கிறார்). பிறகு ஏன் எவனோ தருகிறான்? என்று ஏய்த்து வாழ வேண்டும்.
இதுபற்றி விவாதிக்கத் தொடங்கினால் சிலர் கடவுளின் சக்திக்கு அபூர்வ விளக்கங்கள் தருகிறார்கள். இத்தனைக்கும் அவை ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாததாக இருக்கிறது. ஒருவர் சொல்வதில் ஓரிரு அம்சங்களையாவது மற்றவர் கண்டிப்பாக மறுக்கிறார்.
அப்படி மறுப்பவர்களில் நான் அதிகப்படியான விஷயங்களை மறுக்கிறேன். இறைவழியாக சொல்லப்பட்ட சில ஒழுக்கக் கருத்துக்களைத் தவிர இறைவன், இறையருள், நம்பிக்கையின் பலன் எனச் சொல்லப்படும் அத்தனை கூறுகளையும் நான் மறுக்கிறேன்.  அதனால் எனது எண்ணங்களை பதிவு செய்யும் ஒரு முயற்சியாகவே இதனை எழுதுகிறேன்.

3 comments:

  1. கடவுள் மீதே சந்தேகமா? அப்படி என்னதான் எழுதப் போகிறீர் பார்க்கிறேன்....

    ReplyDelete
  2. //கவலையைப் போக்கும் கடவுள் ஒருவர் இருக்கும்போது எனக்கு எப்படி கவலை வந்தது? என்று சிந்திப்பவர்கள் யாருமில்லை.//

    - ஒரு வேலை கவலை வந்தால் தான் கடவுள் ஞாபகத்துக்கு வருவார் என்பதால் வருதோ...???

    ReplyDelete