Monday, November 14, 2011

ஆலயங்கள் ஏன் கட்டப்பட்டன

இறைவன் இருப்பது உண்மையில்லாமலா இத்தனை கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன, இலக்கியங்கள் இயற்றி இருக்கிறார்கள். அனேகர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்ற சந்தேகம் புதிதாக வரும் ஒவ்வொரு தலைமுறையினரிடமும் எழும்.
நான் அறிந்த படி....
எழுத்தால் ஆன இலக்கியங்களும், கட்டிடங்களால் ஆன கோவில்களும் காலத்தால் பிந்தியவை. இதை உணர சிறிது யோசித்தால் போதுமானது.  மனிதன் 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்படுகிறது. ஒன்றேகால் லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி குடியிருந்த ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து ஐரோப்பாவுக்கு இடம் பெயர்ந்ததாக சான்றுகள் கிடைத்திருக்கின்றன. அவன் கற்களை ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கியது 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான். தீப்பொறியை கண்டுபிடித்து 15 லட்சம் ஆண்டுகளாகிறது. இப்படி அவன் படிப்படியான வளர்ச்சி பெற்று விலங்கு மனிதனில் இருந்து ஆடை அணிந்த மனிதனாக மாறுவதற்கே எத்தனை ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டானோ?. சைகை மொழியில் இருந்து வாயால் ஒலியெழுப்பி வாழத் தொடங்கிய காலம் அதற்கும் பிந்தையது. எழுத்துக்களை பயன்படுத்தத் தொடங்கிய காலம் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
நமக்கு கிடைத்திருக்கும் சான்றுகள்படி இன்று வழக்கிலுள்ள சீர்பட்ட எழுத்துக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிற்பட்டவைதான். அதற்கு முன்புள்ள கல்வெட்டு எழுத்துக்கள், சுவடி எழுத்துக்களை ஆய்வு செய்யாமல் ஒப்பிட்டால்கூட இதை எளிதாக புரிந்து கொள்ளலாம். வழக்கில் உள்ள மொழிகளில் மூத்தவையாக அறியப்படுபவை லத்தின், தமிழ் போன்ற சில மொழிகள்தான். இவற்றில் கிடைக்கப் பெற்ற இலக்கியங்கள் இரண்டாயிரம் முதல் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டவை. மனிதன் குகைகளில் வாழ்ந்து கூடாரத்துக்கு குடிபெயர்ந்து குட்டிச்சுவர் கட்டி குடிசைக்கு உயர்ந்து கல்களை வைத்து கட்டிடங்கள் எழுப்பிய காலமும் இதுபோல சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான். இவையாவற்றுக்கும் தொல்லியல் சான்றுகள் உண்டு.
ஆலயங்களுக்கு சென்ற காலம் தவிர்த்து அறிவின் ஆலயங்களாக விளங்கும் நூலகங்களுக்கும், அருங்காட்சியகங்களுக்கும் பயணித்தவர்களுக்கு இந்த உண்மை விளங்கும். அல்லது பள்ளியில் வழங்கும் பாடப்புத்தகங்களில் படித்தவற்றுக்கும், பண்டிதர்களாக எண்ணிவரும் பெரியவர்கள் சொன்ன (பச்சைப்புழுகு) ஆன்மிக கதைகளுக்கும் முரண்பாடு தெரிகிறதே என்று மூளைக்குள் வினாதொடுத்து தேடலை முடுக்கிவிட்டிருந்தாலும் உணர்ந்து கொள்ளலாம்.

ஆக எழுத்துக்கள் தோன்றிய காலம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்பது தெளிவாகிறது. ஆனால், ராமன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவன் என்றும், கீதை பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடவுளால் உபதேசித்து எழுதப்பட்டவை என்றும், வேதம் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு, எங்களுக்கு ஓத உரிமை வழங்கப்பட்டது என்று சொல்வதையும் சிறிதும் சிந்தியாமல் ஒப்புக்கொள்ளவும், நம்பவும் முடிகிறது என்றால் பெரியார் கூறியதுபோல அதை நம்புபவர்களுக்கு மூளையில் விலங்கிடப்பட்டுள்ளது என்பதுதானே உண்மை.
நான் பள்ளியில் படித்தபோது ஒரு கேள்வி கேட்டார்கள்.
உடலுக்கு ஆற்றல் தருபவை எவை?
புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள், மினரல்ஸ் என்பதுதான் பதில். நன்றாகப் படித்தவன் முதல் கடைசி மதிப்பெண் பெற்றவன் வரை யாவரும் இந்தப் பதிலைத்தான் சொன்னார்கள்.
ஆனால் பள்ளியைவிட்டு வெளியே வந்ததும் உன்னை இயக்குபவன் யார்? என்று கேட்டால், முதல் மதிப்பெண் பெற்றவன்கூட, என்னை இயக்குபவன் ஆண்டவன் என்று சொல்லி கன்னத்தில் போட்டுக் கொள்கிறான்.
ஏன் இவன் பார்வையில் ஆண்டவனும் புரோட்டினும் ஒன்றா? இல்லை, எதையும் அறிந்து கொள்ளாமல் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையா இவன்?
சில காலம் புரோட்டின் (உணவு) சேர்க்காவிட்டால் இவன் நம்பும் இறைவன் இவனை இயக்குகிறானா என்பது உடனே தெளிவாகிவிடும். செய்து பார்ப்பர்களா இறைவனை நம்புபவர்கள்?
தன்னை, தன் உடலை இயக்கும் சக்தி மேற்கண்ட சத்துக்கள் என்று பள்ளியில் சொல்லிவிட்டு வெளியில் வந்து ஆண்டவன், ஆத்மா என்று சொல்கிறார்களே கொஞ்சமாவது மூளை வேண்டாமா?
ஒவ்வொருவராலும் இப்படிச் சொல்ல முடிகிறது என்றால் கடவுள் நம்பிக்கையின் பேரில் சொல்லப்படுவதை அப்படியே நம்பி வந்த முட்டாள்தனத்தால், மூளையில் விலங்கிடப்பட்டுள்ளது என்பதுதானே உண்மையாகிறது.
இதற்கு அடிப்படையாய் இருந்து வந்தது 1) ஆதிமனிதனின் அறியாமை. அடுத்ததாக 2) அறிவால் தெளிந்து சூது மதி கொண்டு செயல்பட்ட அறிவைக் கெடுத்த ஆசான்கள். 3) ஒரு குலத்திற்கு ஒரு நீதி என்று எழுதியதோடு, இன்றுவரை அந்த அநீதியை தூக்கிப் பிடித்து வரும் கறைபடிந்த நீதிமான்கள். 4) இவற்றை ஆராயாமல் ஏற்றுக் கொள்ளத் தொடங்கும் முட்டாள் மாக்கள்.
மேலும் பக்தி பரப்பப்படும் விதமும் அவனது வாழ்வோடு ஒன்றி மூளையை மழுங்கடிக்கச் செய்வதாக இருக்கிறது. அதாவது... அன்றன்றுக்குரிய அப்பத்தை அன்றே சாப்பிட வேண்டும், எனவே தினமும் ஒரு வசனமாவது வாசியுங்கள்.
தினமும் 5 முறை தொழுகை செய்யாவிட்டால் மனிதமனம் தீயவற்றின் பின்னால் சென்றுவிடும்.
காலை மாலையாவது சாமி கும்பிட வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் கடவுளை நினைத்து பிரார்த்திக்க வேண்டும், இரவில் தூங்கும் முன் நன்றி சொல்ல வேண்டும்.
இப்படி தினமும் அந்த காரியத்தைச் செய்யச் சொல்லி குழந்தை முதலே பழக்கப்படுத்தி வருவதால் அதைப்பற்றி பெரிதாக ஒன்றும் யோசிக்கத் தோன்றுவதில்லை. யோசனையுடன் செயல்பட்டாலும் நாங்கள் சொல்வதைக் கேள், அப்படியெல்லாம் கேட்கக்கூடாது என்று தடை செய்கிறார்கள்.
மேலும் மாதத்துக்கு ஒரு திருவிழா வீதம் கணக்கிட்டு கொண்டாடி, கூத்தடித்து அறிவை மழுங்கடித்தும் வைத்திருக்கிறார்கள்.
ஆக இலக்கியங்கள் மனிதன் இயற்றியவை, தினமும் திணிக்கப்பட்டு நிலை பெற்றவை என்பதை பார்த்தாகிவிட்டது. அடுத்ததாக கோவில்களுக்கு வருவோம்.
கோவில்கள் அரசர்கள் ஆட்சி செய்யும் இல்லங்கள் (கோ+இல்) என்று பொருள் கொள்ளப்பட வேண்டும். மன்னர் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக கோவில்கள் கட்டப்பட்டன. குளங்கள் வெட்டப்பட்டன. ஊர்ப்பயணம் புறப்படுபவர்கள் தங்கும் இடங்களாக ஆலயங்களும், சத்திரங்களும் பயன்பட்டன. அரசனின் வரி சேகரிக்கும் இடமாகவும் கோவில்கள் இருந்தன. நலத்திட்டங்கள் (அரசனிகன் கட்டுப்பாட்டு இடமென்பதால்) கோவில்களை மையப்படுத்தி செயல்படுத்தப்பட்டன.
நம்பிக்கையின் பேரில் புத்தியை மழுங்கச் செய்த பின்னர் கோவில்களுக்கு புனிதம் கற்பிக்கப்பட்டது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பிரித்து வைத்தனர். முறையற்ற வகையில் கட்டாய நிதி பிரித்து ஆலயங்களுக்கு சிறப்பு சேர்க்கப்பட்டது. விழாக்கள் எடுக்கப்பட்டது.
ஆக கோவில்களும், சாத்திரங்களும் காலத்தால் பிந்தியவை, மனிதனே எழுதியவை, படைத்தவை என்பது நன்கு புலனாகிறது.
ஒருவன் நேற்றைய பொழுதுக்கு இன்றைய பொழுது மாற்றமும், ஏற்றமும் பெற்றிருந்தால்தான் முன்னேறி இருப்பதாக பொருள் கொள்ள முடியும். பழங்காலத்தில் எழுதப்பட்ட நூல்கள் மட்டுமே உண்மையானவை, இப்போது நாம் சிந்திப்பவை எல்லாம் வீணானது என்ற எண்ணம் மாறினால் ஒழிய முன்னேற்றம் கிடைக்கவே கிடைக்காது. ஒழுக்கச் செய்திகள் சில சொல்லப்பட்டு இருப்பதால் அவை அனைத்தும் உண்மையானவை, நலமானவை, நம்பிக்கையானவை என்று சொல்வது நமக்கு புத்தி செயல்படவில்லை என்பதை காட்டுவதாகும். தன்னால் இதைவிட சிறப்பாக செயல்பட முடியாது என்று ஒப்புக்கொள்வதே ஆகும்.
பழையனவற்றை விமர்சிக்கும்போது கெட்டதை, ஆபாசங்களை மறந்துவிட்டு நல்லதை மட்டுமே ஏற்றுக் கொள்ளச் சொல்கிறார்கள் சிலர். இது பாலில் கலந்த நஞ்சை மறந்துவிட்டு சுகமாக பருக வேண்டும் என்பதற்கு ஒப்பாகும்.
குறை நிறைகளை விமர்ச்சிக்கும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது என்பதை உணர்ந்து இளைய தலைமுறையினருக்கு ஆய்ந்தறியும் பகுத்தறிவு சுதந்திரம் வழங்க வேண்டும். அப்படி இல்லாமல், மூடநம்பிக்கைகளை பின்பற்றாமல் விரும்பாமல் வாழ்வை நடத்த விரும்பும் இளைய தலைமுறையிடம்... நாங்களெல்லாம் முட்டாள்களா? நீ சொல்வதை ஏற்க முடியாது, என் மானம்மரியாதையை கெடுக்கப் பார்க்கிறாயா, ஊரோடு ஒத்துப்போய்விடணும், ரொம்ப கஷ்டப்படப் போகிறாய், நான் உயிரை மாய்த்துக் கொள்வேன்? என்று மிரட்டுவதும், பயங்காட்டுவதுமாக வளர்த்து வந்தால் இல்லாத பூச்சாண்டியை எண்ணி ஏமாறும் சிறு குழந்தை தனத்துடன்தான் இளைய சமுதாயம் வளர்ந்து வரும்.
இப்படிப்பட்ட பக்தி இல்லாவிட்டால் உலகம் உருப்படாதா? இன்னும் சிந்திப்போம்

No comments:

Post a Comment