Sunday, November 13, 2011

கடவுளை ஏன் நம்ப வேண்டும்


ஒரு மனிதன் ஏன் கடவுளை நம்ப வேண்டும்?, நீங்கள் எதற்காக கடவுளை நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள்? என்றுதான் என்னிடம் கடவுள் பற்றிப் பேசுபவர்களிடம் நான் முதலில் கேட்பேன்.
இந்தக் கேள்விக்கு நிறைய பேர் பதிலளிக்க முடியாமல் திகைப்பார்கள். சிலர் நம்மைப் படைத்தவர் அதனால் வணங்குகிறேன் என்பார்கள். (படைப்பு அவரால் நிகழ்த்தப்பட்டது அல்ல என்பது பின்னால் விளக்கப்படுகிறது.)
ஆனால் இப்படி சொல்பவர்களின் நம்பிக்கையும், பக்தியும் எத்தகையது என்பதை பார்த்தோமானால் வினோதங்களை உணரலாம். பக்தர்கள் வேண்டிக் கொள்ளும் சில பொதுவான காரணங்கள். தங்களது தெய்வங்கள் தங்களது பிரச்சினைகளில் தலையிட்டு தங்களுக்கு துணை செய்ய வேண்டும்,
இழந்த உடல் நலம் திரும்ப வேண்டும், தங்களுக்கு பிரியமானவர்கள், தொலைவில் இருக்கும் தான் விரும்பும் நபர் ஆகியோர் பாதுகாக்கப்பட வேண்டும், நலமாக இருக்க வேண்டும்,
வான் மழை வேண்டும்,
சொத்து சுகம் வேண்டும், அறிவு வேண்டும்,
இழந்தவை, பழையன திரும்ப வேண்டும். பேய்பிசாசுகளிடம் இருந்து தங்களை காக்க வேண்டும்
மேற்கண்டவைகளில் ஒன்றை குறிப்பிட்டு வேண்டுவோர் ஏராளம்.
இவை தவிர, சில சமயங்களில் நீர் எனக்கு உதவியதற்கு நன்றி என்றும், பிரார்த்தனை கைகூடாததுபோல் உணர்ந்தால் கடவுளே நீர் விட்டவழி ஆகட்டும் என்றும் வேண்டுகிறார்கள்.  கடவுளே தங்களை சோதிக்காமல் இருக்க வேண்டும் என்று மன்றாடுவோரும் இருக்கிறார்கள்.
இவர்களின் வேண்டுதலை கவனித்துப் பார்த்தால் படைத்ததற்காக வேண்டுவதுபோல் தெரியவில்லை. தேவை கருதியும், கவலைகளை தீர்க்க வேண்டியுமே கோரிக்கை விடுக்கிறார்கள். ஆனால் கடவுளை நம்புவோரும் நிம்மதியாக இருந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் காலம் காலமாக நம்பி வந்தும் அவர்களுக்கு துன்பமும், துயரமும் வந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதை உணர முடிகிறது. மனிதனும் தான் கடவுளை நம்புவதாக கூறிக் கொண்டாலும், வேண்டிக் கொண்டாலும் அடுத்த நிமிடமே நாம் செயல்பட்டால்தான் நமக்கு வெற்றி என்பதை உணர்ந்தவனாக செயல்பட கிளம்பிவிடுகிறான். ஆனால் அவன் தன்னை பக்திமான் என்று சொல்லிக் கொள்வானாம். சொல்லிக் கொள்ளலாமாம். ஆனால் என்னப்பா இது வேண்டினால் நடக்கவில்லையே, நாம் செயல்பட்டால்தானே நடக்கிறது? அது முயற்சியின் பலன் என்று ஒப்புக் கொண்டால் என்ன? என்று கேட்டால் நான் நாத்திகனாகிவிடுவேனாம். என்ன வினோதம் பாருங்கள்.
மக்களின் பக்தி இந்த நிலையில் இருந்தாலும், வேண்டுதலுக்கு பலன் கிடைக்கிறதா? பலன் கிடைக்காவிட்டால் யாரைக் கேட்பது என்பதெல்லாம் கேட்கக்கூடாத கேள்விகளாம்? அப்படி கேட்பவர்களுக்கு தண்டனையளிக்க நரகமென்று தனி உலகம் வைத்திருக்கிறானாம் அந்த ஆண்டவன். நாத்திகனென்று தனிப் பெயர் சூட்டுகிறார்கள் இந்த பக்தகேடிகள்.
உனக்கு நல்ல மனைவியை அனுப்பி பகவான் பதில் சொல்லுவார்? உனக்கு வரும் மனைவி மிகுந்த பக்தி உள்ளவளாக இருப்பாள். நீ நிரம்ப துன்பப்படுவாய் அதன்பிறகுதான் உனக்குத் தெரியும்? திருந்துவாய்? என்று பலர் சாபமிட்டிருக்கிறார்கள்.
பகவான் இந்த வேலையைத்தான் பார்க்கிறாரோ? நான் என்ன பாவம் செய்தேன் என்று கேட்டால் எனக்கு பதிலளிக்க மாட்டாராம். அதற்குப் பதிலாக எனக்கு ஒத்துவராதவரை வாழ்க்கைத் துணையாக அனுப்பி வைக்கும் வேலையைத்தான் அவர் செய்வாரோ? நான் துன்பப்படுவதைப் பார்த்து சந்தோஷம் காணும் அற்ப பிறவியா ஆண்டவன்? அல்லது கோபமாகி கத்தும் காட்டு மிராண்டி பக்தர்களின் ஏவலைக் கேட்டு எனக்கு எதிராக செயல்படும் கயவனா? (பக்தன் பகவானுக்கு கொடுக்கும் வேலையை பார்த்தீர்களா? என்னை துன்பப்படுத்த அவனை அவதாரம் எடுக்கச் சொல்கிறார்கள். நான் அவர்களை கேள்வி கேட்டால் மனம் புண்படுகிறதாம். பழிக்குப் பழி கேட்கிறார்கள் போலும். அன்பை வலியுறுத்தும் மதங்கள் உருவாக்கிய பக்தர்களின் அன்பையும், பண்பையும் அளவிட்டுக் கொள்ளுங்கள்).
சரி போகட்டும். நம்மை நாத்திகன் என்பவர்களுக்கு நாத்திக தலைவன், பகுத்தறிவுப் பகலவன் பெரியார் சொல்லும் விளக்கம் ஒன்று இந்த இடத்திற்கு நெஞ்சில் நிற்கும்படியாக வெகு பொருத்தமாக இருக்கும்.
கடவுளை மறுப்பவன் நாத்திகன் என்று சொல்கிறார்கள். இந்த பதத்தை உருவாக்கிய ஆத்திகனுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டவன் ஆவோம். கடவுள் என்ற ஒன்று உண்மையாக இருக்கிறது என்று நம்புபவன், நினைப்பவன் அதை மறுக்க முடியும் என்று சிந்திக்க முடியாது. கடவுள் உண்மையில் இருந்தால் அதை மறுக்கவும் முடியாது. அப்படி இருக்கும்போது பின்னால் வருபவர்கள் இதனை சந்தேகப்படலாம். சந்தேகப்பட்டு மறுப்பவர்கள் நாத்திகன் என்று எழுதி வைத்திருக்கிறானே இதில் இருந்தே கடவுள் என்பதை அவனே மறுத்திருக்கிறான் என்பது விளங்கவில்லையா? என்று பெரியார் கேள்வி கேட்கிறார்.
இது ஒருபுறம் இருக்கட்டும், எந்த பக்தனாவது கடவுளை நம்புகிறானா? என்று பார்த்தால் அதுவும் இல்லை.
கோவிலுக்கு செல்லும்போதுகூட பக்தன், தன் உடமைகள் பத்திரமாக இருக்குமா என்று சந்தேகப்படுகிறான். காலணி காணாமல் போகுமோ என்று அஞ்சுகிறான். இதை கொஞ்சம் பார்த்துக்கிறீங்களா, நான் இப்போ வந்துடுறேன்னு கிளம்புகிறான். கடவுள் நம் எல்லோரையும் காப்பாத்துவான், வேண்டியதை தருவான் என்று சொல்லிக் கொள்கிறான். ஆனால் காலணியைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கைகூட அவனுக்கு கிடையாது.
பட்டை அடித்துக் கொண்டு பயணம் கிளம்பும்போது பஸ்சில் முன் இருக்கைகளிலும், பின் இருக்கைகளிலும் அமர தயங்குகிறான். விபத்து ஏற்பட்டால் பாதிப்பு வந்துவிடுமாம். குழந்தை குட்டிகள் நடுத்தெருவுக்கு வந்துவிடுமாம். அதனால் நடுமத்தியில் இருக்கை பிடித்து அமர நினைக்கிறான். இப்படி நினைப்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். ஆனால் வேண்டுதல் மட்டும் போன காரியம் உருப்பட வேண்டும் என்பதாகவும், இறைவா என்னைக் காப்பாற்று என்பதாகவும் இருக்கிறது. வெளியே சொல்லிக் கொள்வதும் கடவுள் புண்ணியத்திலே எல்லாம் நல்லபடியா நடக்குது என்று பீற்றிக் கொள்கிறான்.
கடவுள்தான் திக்கற்றவர்களுக்கு பாதுகாப்பு என்று சொல்லிக் கொள்வான் ஆனால் எங்கே கிளம்பினாலும் வீட்டை திறந்து வைத்துவிட்டுச் செல்ல மாட்டான். திறந்து வைத்துவிட்டுப் போனால் பொருட்கள் இருக்காது என்பது தெரியும். அதனால் பூட்டுகிறான். அப்படி இருக்கும்போது நான் பாதுகாப்புக்காகத்தான் பூட்டுகிறேன் என்று சொல்லிக் கொள்வதில் என்ன குறைந்துவிடப்போகிறது. எல்லாம் இறைவன் தருகிறான், பாதுகாக்கிறான் என்று ஏன் இட்டுக்கட்டி வைக்க வேண்டும்.
கொடுக்க வேண்டியதை சரியான நேரத்தில் கொடுப்பான் எடுக்க வேண்டியதை எடுத்துக் கொள்வான் என்று ஏன் சொல்ல வேண்டும். அப்படியானால் நீங்கள் வீட்டைவிட்டு சென்றதும் உங்கள் உடமையை எடுத்து வேறு யாருக்கும் கொடுக்க விரும்புகிறானா? உங்கள் இறைவன். அப்படி வேறு யாருக்கோ கொடுக்க விரும்புவதை நீ சேர்த்து (மறைத்து) வைத்து யாரும் எடுத்து கொள்ளக்கூடாது என்று பூட்டி வைத்திருக்கிறாயா? அப்படியானால் அது உன் (பகவான்) நம்பிக்கைப்படி பார்த்தாலே குற்றமல்லவா?
கடவுளுக்கு காணிக்கை வேண்டும் என்று கேட்டால் பக்தன் தன்னால் முடிந்ததை தருகிறான். ஆனால் கடவுள் உன் வீட்டை எனக்குத் தரச் சொன்னார் என்று யாராவது கேட்டுப் பாருங்கள். யாரு காதுல பூ சுத்தப் பாக்குற. இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் நம்மகிட்ட வேணாம் என்று அவனே எதிர்க்கத் தொடங்கிவிடுகிறான். அந்த அளவுக்குத்தான் அவனுக்கு கடவுள் மீது நம்பிக்கை.
ஆனால் ஏமாற்றுக் கூட்டத்தோடு இருக்க வேண்டி இருப்பதால் நானும் உங்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன்தான் என்று சொல்லுவதுபோல நான் நம்புகிறேன் என்று பாசாங்கு பண்ணுகிறான்.
இப்படிப்பட்டவர்களையெல்லாம் மன்னித்து சொர்க்கத்தில் சேர்த்துக் கொள்வானாம் அந்த ஆண்டவன். ஆனால், என்னய்யா இது, இறைவனின் ஆட்சியில் இருக்கும் பூமியில் எல்லாம் அநியாயமாக நடக்கிறது? என்றால், என்னை நாத்திகன் என்று ஏசுகிறார்கள். என்னைத் தாக்க துன்பங்களை அனுப்ப வேண்டும், அல்லது ஆயுதத்துடன் அவதரிக்க வேண்டும், பத்திரகாளியை (கோர உருவமும், ஆவேசமும் கொண்ட ஒரு தெய்வமாக சொல்லப்படுகிறது) எனக்கு மனைவியாக்கி சோதிக்க வேண்டும் என்று வேண்டுகிறான் பக்தன்.
இப்படி கூட்டத்தோடு கூட்டமாக இருப்பது பாதுகாப்பு என்று எண்ணிக் கொண்டு தன் சிந்தனையைக் கூட சொல்லாதவர்கள் நிறைய உண்டு.
நான் விவாதித்தபோது பலர் ஒப்புக் கொண்ட சில உண்மைகள் இங்கே தருகிறேன்...
பெரியார் மூட நம்பிக்கையைத்தான் விட்டுவிடச் சொன்னார்? அவர் கடவுள் இல்லையென்று சொல்லவில்லை என்கிறார்கள் சிலர்.
நான் பதில் சொன்னேன் (கடவுள் இல்லை என்பதோடு மட்டுமல்லாமல், இல்லவே இல்லை என்று உறுதிபடச் சொன்னவர் பெரியார் என்றாலும் கூட, அவர்கள் சொல்வதைப் போலவே பெரியார் சொல்லியிருப்பார் என்று வைத்துக் கொண்டால்)
சரி நீ மூட நம்பிக்கைகளை விட்டுவிட்டு ஒரு கடவுளைப்பார். அங்கு ஏதாவது இருந்தால் நீ தொடர்ந்து வழிபடு என்பேன்.
எதிர் தரப்பில் இருந்து பதில் வராது. ஒரு வேளை பதில் வந்தால் அது என்னால் முடியாது, நான் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள் என்பதாக இருக்கிறது.
நீ சொல்வதை ஒத்துக் கொள்ளலாம், ஆனால் மற்றவர்களுக்குச் சொல்லி செயல்படுத்த முடியாது என்று சிலர் சொல்கிறார்கள்.
சரி நீ யாரையும் மாற்ற வேண்டாம், நீயாவது பின்பற்று என்று அவர்களிடம் சொல்லுவேன். ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு நழுவிவிடுவார்கள்.
நீங்க சொல்வது சரிதான். நானும் அதை நம்ப மாட்டேன். வீட்ல நொய் நொய்ன்னு அரிப்பாங்க. அதான் ஆளோட ஆளா (கோவிலில்) தலையைக் காட்டிவிட்டு வந்துடுவேன் என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். இதுபோன்ற கோழைகள் நிறைய இருக்கிறார்கள். இவர்கள்தான் சமுதாயம் சாக்கடையாக இருப்பதற்கு மூலகாரணம். இவர்கள், யார் என்ன சொன்னாலும் மழுப்பிவிடுவார்கள். கண்டு கொள்ளமாட்டார்கள். காக்கா பிடித்து, எட்டப்பன் வேலையை கடைபிடித்து பிழைக்க வழி தேடுவார்கள். நடுநிலை வகிப்பதாக கூறிக் கொண்டு யார் எக்கேடு கெட்டாலும் எனக்கொன்றும் இல்லையென்பதுபோல நழுவிப் போய்விடுவார்கள்.
இன்னும் பலர் எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருக்குமே என்று தங்கள் எண்ணத்தை வெளியில் சொல்வதில்லை. இருக்கிற காலத்தை இப்படியே கழிச்சிட்டு போயிடுவோம் நமக்கென்ன? என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.
எல்லாவற்றையும் மீறி நாத்திகன் என்று ஒப்புக் கொண்டவர்களையும், அறிவியல் உண்மையைச் சொன்னவர்களையும் கொலைவெறியுடன் தாக்கி அழித்திருக்கிறார்கள் பக்தகேடிகள். அதனால்தான் உண்மையை உணர்ந்தவன்கூட அதை வெளிப்படையாக சொல்லாமல் கடவுளை நம்பு ஆனால் காளை மாட்டை கட்டி வை என்று எழுதி வைத்துவிட்டு சென்றுவிட்டான்.
கடவுளை நம்பாதே உன் உடமையை நீயே பார்த்துக்கொள் என்றால் கேட்பானா புத்தி கெட்டுப் போன பக்தன். அவனுக்கு ஆத்திரம் மட்டும்தானே வரும். அதனால்தான் நம்பு ஆனா நம்பாதே என்கிற பாணியில் சொல்லி வைத்திருக்கிறார்கள் முந்தைய பகுத்தறிவுவாதிகள்.
இதையும் பக்திக் கதைகளில் ஒன்றாகச் சொல்லி சம்பாத்தியம் பார்க்கும் கயவர்களும் இருக்கிறார்கள். கடவுளை நம்பினாலும் நமது உடமைகளை நாம்தான் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற கருத்துக்காக இந்தக் கதையை சொல்லி வருபவர்களை நான் அறிவேன்.
நானும் பலரைப் போலவே கடவுள்தான் அனைவரையும் படைத்தார். நமக்குத் தேவையானவற்றை வழங்குகிறார் என்று நம்பி வணங்கி வந்தவன். ஆனால் அப்படி எதுவும் நடைபெறாததால் அதன்மேல் சந்தேகம் எழ அதைவிட்டு விலகத் தொடங்கினேன். அது உண்மையில்லை என்று உணரத் தொடங்கினேன்.
அது எப்படி உண்மையில்லை என்பதை இனி பார்க்கலாம்.

No comments:

Post a Comment