Saturday, November 12, 2011

சிந்திக்கத் தொடங்கும் வேளையிலே...

இதை எழுதும் முன்பாக பல யோசனைகள் என்னை புடம்போட்டன. முன்னோர்கள், கற்றோர்கள், அனுபவசாலிகள் அறிந்து, உணர்ந்து சொன்ன இவற்றை மறுக்கும் அளவுக்கு எனக்கு அனுபவமும், உண்மை விளக்கமும் தெரிந்திருக்கிறதா? இதை எழுத நான் தகுதியானவனா? என்பவை அவற்றில் முதன்மையான கேள்விகள்.
நான் படித்த ஆன்மிக, அறிவியல், நாத்திக நூல்களில் ஆன்மிக நூல்கள் தவிர்த்தவை தெளிவானவையாக அறிய முடிகிறது. அறிவியல், நாத்திக நூல்களில் ஒரு விளக்கம் எல்லா இடங்களிலும் ஒன்றுபோலவே காணப்படுகிறது.
ஆன்மிக நூல்களில் மட்டும் ஒரே செயுள், சம்பவங்களுக்கு ஒவ்வொரு ஆசிரியரும், கருத்தாளர்களும் சொல்லும் விளக்கங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாததாக இருந்து ஒவ்வொருவரையும் குழப்பிக் கொண்டிருக்கிறது. அவற்றில் பல கருத்துக்கள் தெளிவற்ற சிறுபிள்ளைத்தனமானவை என்பதை நான் அறிந்து கொண்டேன். அப்படிப்பட்ட விளக்கத்தை அளித்தவர்கள் மக்களால் வணங்கப்படும் மகான்களாக இருக்கிறார்கள்.
எனவே எனது அனுபவங்கள் குறைவாக இருப்பினும் அவற்றை பதிவாக செய்வதில் பிழையில்லை என்றே கருதுகிறேன். இது என்னை மேலும் பக்குவப்படச் செய்யும் என்பதோடு, பலருக்கும் பயன்படத்தகுந்தது என்ற எண்ணத்துடன் எனது கருத்துக்களை இங்கே பதிவு செய்கிறேன்.

தொடக்கத்தில் நான் சாத்திரங்கள் கற்றவன் இல்லை. பகவத்கீதை, பைபிள் (முழுக்க) படித்தவன் அல்ல. பாசுரங்கள் பாடத் தெரிந்தவனும் அல்ல. கடைக்கோடி கந்தசாமி போல எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு சக்தி இருப்பதாகவும், அது என்னை கவனித்துக் கொண்டும், வழி நடத்திக் கொண்டும், எனக்கு வேண்டியதை அருளிக் கொண்டிருப்பதாகவும் நம்பிக்கொண்டிருப்பவர்களில் ஒருவனாக இருந்தேன். கடவுளை அந்த ரீதியிலேயே நம்பினேன், வணங்கினேன், அணுகினேன்.
ஆனால் அனுபவம் பெருகப் பெருக எனக்கு கடவுளின் செய்கை என்பதில் சந்தேகம் வந்தது. வேண்டுதல்கள் நிறைவேறவில்லை. நாமாக வேண்டி நாமாக சமாதானம் செய்து கொள்ள வேண்டியது இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.
இதுபற்றி மற்றவர்களிடம் விளக்கம் கேட்டாலும் அவர்களும் சமாதானம் சொன்னார்கள். இன்னும் உறுதி வேண்டும் என்று சிலர் சொன்னார்கள். பாவம் தீர்ந்த பிறகு உங்கள் வேண்டுதலுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்றார்கள். இறைவன் அருளும் வரை அமைதியாக இருங்கள் என்று அறிவுரை வழங்கினார்கள்.
இதற்குமேல் தெளிவான விளக்கம் எங்கேயும் கிடைக்கவில்லை. ஒவ்வொருவரிடமும் கேட்டுத் தொடர்ந்து கொண்டிருந்தால் உருப்பட முடியாது என்று உண்மை தெரிந்தது. இறுதியில் எல்லாவற்றுக்கும் மேலே இருப்பவன் என்று சொல்லப்பட்ட இறைவனிடமே (மனதிற்குள்ளாக வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனை இறைவனுக்கு கேட்கும் என்று சொல்லி இருந்தார்கள்) கேட்டேன். என் வேண்டுதல் உனக்கு கேட்கவில்லையா. என் உறுதி போதவில்லையா, நான் செய்த பாவங்கள் தீரவில்லையா? நான் என்ன பாவம் செய்தேன் அது தீர்வதற்கு?, எல்லாம் உன்னால் நடத்தப்படுகிறது என்றால் இங்கே எது பாவம்? என்னால் எப்படி பாவம் செய்ய முடிந்தது?. எனது கேள்விக்கு பதிலளிக்க மாட்டாயா? என்று கேட்டேன்.
பதில் இன்னும் வரவில்லை.
பிறகும் நானாக சொல்லிக் கொண்டேன். பதில் உரைக்கும் வரை உன்னை வணங்குவதில்லை. நான் இந்த முடிவுக்கு வந்த பிறகு நான் கடவுள் நம்பிக்கையற்றவன் என்பதை வெளிப்படையாக தெரிவித்தேன். அப்படியென்றால் நீ பெரியார் கோஷ்டியா? என்று கேட்டார்கள். அதுவரை பெரியாரைப் பற்றி அவ்வளவாகத் தெரியாத நான் சில பகுத்தறிவு நூல்களை வாங்கி படித்தேன். அதில் இன்னும் சீரிய கேள்விகள் இறைவனை நோக்கியும், பக்தர்களை நோக்கியும் வீசப்பட்டு பதில் உரைக்கப்படாமல் கிடந்தன. அவையும் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக இருந்ததால் நான் பெரியாரின் கருத்துக்களில் ஈடுபாடு உள்ளவனாகவும், நாத்திகனாகவும் தொடருகிறேன்.
ஆக மகான்கள் அளித்து வரும் விளக்கத்தை சிறிது சிந்தனையுடன் அணுகியதால் கடவுளின் அருள் பொய் என்பதை உணர்ந்து கொண்டேன். அது உண்மையற்றதாக இருப்பதையும், கற்பிக்கப்பட்டதாக உள்ளதையும் அறிந்து கொண்டேன்.
நான் (படித்து, அனுபவித்து) அறிந்ததும், மக்கள் எழுப்பும் சில ஐயங்களுக்கு எனது விளக்கமும் இனி!

No comments:

Post a Comment